மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் ஆரம்பகால செயற்பாடுகள் பற்றிய ஆதாரங்கள் இல்லாதபடியால் இக்கிராமத்தைச்சேர்ந்த திரு. வல்லிபுரம் என்பவருடனான நேர்காணல் மூலம் பெறப்பட்ட தகவல்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்பாடசாலையானது 1953 ஆம் ஆண்டு குடியேற்றத்திட்ட அதிகாரி களுதாவளையைச்சேர்ந்த கந்தையா என்பவரின் முயற்சியால் அவரது தங்கை மனோண்மணி என்பவரை ஆசிரியராகக்கொண்டு 15.01.1953 ஆம் ஆண்டு 10-15 மாணவர்களோடு ஓலைக்குடிசையில் ஆரம்பமானது.
இதன்
பின் 1957 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக மண்டூரைச்சேர்ந்த டேவிட் - ஆபிரகாம் என்பவரை அதிபராகக்கொண்டு மட்/பட்/13ஆம் கொலணி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை என்றபெயரில் 01ஆம் வகுப்புத்தொடக்கம் 5ஆம் வகுப்பு வரை 30 மாணவர்களைக்கொண்டு இக் கிராமத்து பஞ்சாயக்குழு உறுப்பினர்கள் சி.தாமோதரம், உ.செல்லத்துரை, த.சின்னத்துரை, வல்லிபுரம் என்பவர்களது தீவிரமான முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்பின் கல்லோயத்திட்ட வரப்பிரசாதமாக 100x25 அளவிலான பாடசாலைக்கட்டடம் ஒன்று கிடைத்து மாணவர்கள் கற்றலில் ஈடுபட்டு வந்தனர். மேலும் டேவிட் - ஆபிரகாம் என்பவரைத்தொடர்ந்த ஜீவா ஜீவரெட்ணம் என்பவரை அதிபராகக் கொண்டு பாடசாலைச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்பின் அதிபராக கடமையேற்ற வினாயகமூர்த்தி அவர்களினதும் கிராம மக்களினதும் முயற்சியினால் 1992 ஆம் ஆண்டு தரம் 6-9 வரையான வகுப்புக்கள் வைப்பதற்கு அனுமதி பெறப்பட்டு 2ஆம் தரப்பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது.இதற்கு இக்கிராம மாதர்சங்க தலைவியாக செயற்பட்டுவந்த திருமதி. இ.வல்லிபுரம் என்பவரின் அயராத முயற்சி மதிக்கத்தக்கதொன்றாகும். இக்காலப்பகுதியிலேயே மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா வித்தியாலயம் என பெயர்மாற்றம் பெற்றது.
இதன்பின் அதிபராக கடமையேற்ற திரு.சோ.வசந்தகுமார் அவர்களின் காலப்பகுதியில் 2003 ஆம் ஆண்டு தரம் 10-11இக்கான அனுமதிபெறப்பட்டு மாணவர்கள் கற்றலில் ஈடுபட்டு 2004 ஆம் ஆண்டு முதன்முதலாக க.பொ.த சா.தரப்பரீட்சைக்கு தோற்றி சிறப்பான பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்தனர். எனினும் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இப்பாடசாலையில் விஷேடஅதிரடிப்படையினர் 04.07.2002 ம் திகதி வரை முகாமிட்டிருந்து தமது செயற்பாட்டை முன்னெடுத்தனர். இக்காலப்பகுதியில் பாடசாலையின் அனைத்து செயற்பாடுகளும் ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மந்தகெதியில் நடைபெற்று வந்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும். இருந்தும் அதிபர் வசந்தகுமார் அவர்களின் பதவிக்காலத்தில் 20X80 அளவுடைய வகுப்பறைக்கட்டடமும் 20X100 அளவுடைய வகுப்பறைக்கட்டடமும் கிடைக்கப்பெற்றமை முக்கிய விடயமாகும்.
தொடர்ந்து 2006 ஆம் ஆண்டில் இருந்து இப்பாடசாலையின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்ட திரு.செ.திவ்வியராஜ் அவர்களின் காலத்தில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.
அதன்பின் 28.01.2007 ஆம் திகதியிலிருந்து அதிபராக கடமையேற்றுக் கொண்ட திரு.செ.நேசராசா அவர்களின் காலத்தில் கற்றல் கற்பித்தல் இணைப்பாட விதானச்செயற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருந்தது. இக்காலப்பகுதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் தொடர்ச்சியாக மாணவர்கள் பெற்றுச்சித்தியடைந்து வருகின்றனர். அதேபோன்று க.பொ.த.சா.தரப்பரீட்சையில் 2012 இல் 55வீதமான மாணவர்கள் சித்திபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இணைப்பாடவிதானச்செயற்பாட்டில் விளையாட்டுப்போட்டியில் 2011,2012 ஆம் ஆண்டுகளில் மாணவர்கள் மாகாணமட்டத்தில் முதலிடம் பெற்று தேசியமட்டப்போட்டிகளில் பங்குபற்றி வருகின்றனர். அத்தோடு சமூகவிஞ்ஞானப் போட்டியில் 2011 ஆம் ஆண்டு தேசியமட்டத்தில் 03 மாணவர்கள் வெற்றியீட்டி உள்ளனர். அதேபோன்று ஓவியப்போட்டியில் மாணவர்கள் மாகாண மட்டத்தில் வெற்றிபெற்றுள்ளனர். விவசாய அறிவுப்போட்டியில் மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர். 2011 ஆம் ஆண்டு ஜனவரிமாதம் முதல் இப்பாடசாலை பிள்ளைநேயப்பாடசாலையாக யுனிசெப் நிறுவனத்தினரால் அங்கிகரிக்கப்பட்டது.
பௌதீகவளத்தைப் பொறுத்த மடடில் 2008 ஆம் ஆண்டில் ஆசிரியர் விடுதியும், 2011ஆம் ஆண்டில் விஞ்ஞான ஆய்வுகூடமும், 2013ஆம் ஆண்டில் கணனிஆய்வுகூடமும் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இப்பாடசாலையை 1C பாடசாலையாக தரம்உயர்த்தும் முயற்சியில் 2012ஆம் ஆண்டு தீவிரமாகச் செயற்படுத்தப்பட்டது. இது தொடர்பாக கடந்த 02.05.2012 ஆம் திகதி திரு.செ.நேசராசா(அதிபர்), திரு.பே.யோகேஸ்வரன் (ஆசிரியர்), திரு.தா. மனோகரன்(பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர்), பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களான திரு.த.யோகநாதன், திரு.செ.சுந்தரலிங்கம், திரு.மா.தாமோதரம் ஆகியோர் மாகாணக்கல்விப்பணிப்பாளரை திருகோணமலைக்குச் சென்று நேரில் சந்தித்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது இப்பாடசாலை போதியளவான சகலவசதிகலோடும் கூடிய தரம் 1AB பாடசாலையாக 2020ம் ஆண்டு திரு.து.சபேசன் அதிபர் அவர்களின் பொறுப்பேற்றலின் பின்னர் தரம் உயர்த்தப்படடு ; தற்போதைய அத்தியவசியக்கற்றல் தேர்ச்சி வீதத்தினை 60 வீதத்தில்; இருந்து 75 வீதமாகவும் எழுத்தறிவு வீதத்தினை74 வீதத்தில் இருந்து 80 வீதமாகவும் வாசிப்புத்திறனை75 வீதத்தில் இருந்து 80 வீதமாகவும் அதிகரிக்கச் செய்வதோடு மாணவர் இடைவிலகல் வீதத்தினை கணிசமான அளவு குறைத்து பரீட்சைப் பெறுபேற்றினை அதிகரிக்கச்செய்து சமூகம் விரும்புகின்ற முன்மாதிரியான பாடசாலையாக மாற்றமுடிந்துள்ளது.







